சர்வதேச ரீதியிலான கௌரவத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின்குமார் சங்ககார

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) Hall of Fame (புகழரங்கம்) கௌரவத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை சிறப்பிக்கும் வகையிலும், முதன் முதலாக இடம்பெறவுள்ள (ஜூன் 18 – 22) டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியுடன் இணைந்தவாறு, குமார் சங்ககார உள்ளிட்ட 10 பேருக்கு இக்கௌரவம் வழங்கப்படுவதாக ICC அறிவித்துள்ளது.

அதற்கமைய, 1996 -2015 காலப் பகுதியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்களிப்புச் செய்த இரு வீரர்களில் ஒருவராக குமார் சங்ககாரவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப் பகுதிக்கான பெயர் பட்டியலில் சிம்பாப்வே அணி வீரர் அண்டி பிளவரின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்கியவர்களாக இவர்கள் 10 பேரினதும் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அந்த வகையில் இக்கௌரவத்தை பெறுபவர்களின் எண்ணிக்கை 103ஆக அதிகரிக்கிறது.

மேலும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பின்னர், இந்த கெளரவத்தை பெறும் இலங்கையின் இரண்டாவது கிரிக்கெட் பிரபலம் இவர் எனவும் தெரியவருகிறது.