மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் இன்று 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி

மட்டக்களப்பு  – களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்றைய தினம் 60வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சா.இராஜேந்திராவின் தலைமையில் இந்த கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இன்று 300க்கும் மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகமாகவுள்ள பகுதிகளில் வாழும் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட்டினால் கர்ப்பிணி தாய்மார்களின் இறப்புகளின் எண்ணிக்கையானது குறிப்பிட்ட வீதத்தில் அதிகரித்துள்ளது என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றப்படுவதனால் சாதாரண பக்க விளைவுகளோ பாரதூரமான பக்கவிளைவுகளோ பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.