திருமணப் பொருத்தம் ஜாதகத்தில் பார்ப்பது எப்படி?

பொருத்தம் பார்த்து செய்த திருமணம் கூட சில சமயம் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம்? என்னவென்று அறிந்து கொள்ளலாம்.ஜோதிடம் என்பது 100க்கு 100 சதவிகிதம் அல்ல 1000 சதவிகிதம் உண்மையே.

கொண்டு வந்த ஜோதிட கணிதம் உண்மையாக இருந்தால், சொல்லக்கூடிய ஜோதிடரும் உண்மையாக அமைந்தால் அறுதியிட்டு சொல்ல முடியும் வாசக பெருமக்களே.

ஜாதகம் என்பது ஒரு லக்கின பாவத்தையும், இராசி பாவத்தையும் வைத்து மட்டும் ஜோதிட பலன்களை சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பாவத்தையும் தொட்டு தொட்டுதான் நாம் ஜோதிட முறையை கையாள வேண்டும்.

“மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!” என்பார்கள்.

திருமண பொருத்தங்களை பார்க்கும் போது 9 பொருத்தங்கள் இருக்கிறது, 10 பொருத்தங்கள் இருக்கிறது என்று ஜோதிடர்கள் பொருத்தங்கள் குறித்து கொடுப்பார்கள். ஆனால் அப்படி பொருத்தம் பார்த்து செய்த திருமணம் கூட சில சமயம் தோல்வி அடைந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம்? நாம் 9 பொருத்தம், 10 பொருத்தம், செவ்வாய் தோசம், இராகு, கேது தோசம், என்று பார்ப்பதைவிட ஜாதகத்தில் கட்ட பொருத்தங்களை பார்க்க வேண்டும்.

ஜாதகத்தில் 2-ம் இடம் குடும்ப ஸ்தானம். ஆண், பெண் ஜாதகத்தில் இது எப்படி அமைந்து இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நிறைய குடும்பத்தில் தகாத பேச்சால் தான் பல பிரச்சினைகள் வருகிறது. அதனால் தான் குடும்ப கிரக நிலையை பார்த்து கணிக்க வேண்டும்.

அடுத்து 5-ம் இடமான கவுரவ, புத்திர ஸ்தானங்கள் எப்படி இருக்கிறது என்றும் பார்க்கவேண்டும். மரத்திற்கு மரம், கிளைக்கு கிளை தாவுகிற குரங்கு போன்ற மனசு சம்மபந்தபட்ட இடம் தான் ஐந்தாமிடம். அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய காதல் ஸ்தானமான 5-ம் இடமான இந்த ஸ்தானத்தை மிகவும் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

அடுத்து பார்க்க வேண்டியது 7-ம் இடமான களத்திர ஸ்தானம். இது தான் வரக்கூடிய கணவன் அல்லது மனைவி ஸ்தானம். ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வார்களா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை துணையா என்று இதனை ஆராய்ந்து கணிக்கலாம்.

அடுத்து பார்க்க வேண்டியது 8-ம் இடமான அவமான சின்ன ஸ்தானம். ஒருவருக்கு கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு பெண் அமைவாள் என்று சொல்லுவார்களே அது இந்த 8-ம் இடத்துக்குரியது. இந்த இடத்தை பொருத்தவரை பார்க்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டும்!

11-ம் இடத்திற்கு லாப ஸ்தானம் என்று பெயர். லாபமாக வரக்கூடிய 2-வது மனைவி அல்லது 2-வது கணவன் ஸ்தானம். இந்த ஸ்தானத்தை திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மிகவும் கவனித்து பார்க்க வேண்டும்.

3-ம் மிடமான இந்த ஸ்தானத்திற்கு போக ஸ்தானம் என்று பெயர். தாம்பத்திய உறவை இது எடுத்துக்காட்டும். ஆபரணங்கள் அணியக்கூடிய நிலையையும் இந்த ஸ்தானம் குறிக்கும். திருமணத்திற்காக பெண்ணுக்கு போட்ட நகை, நட்டுகள் தங்குமா தங்காதா என்பதை இதன் மூலம் அறியலாம்.

ஆக 2,3,5,7,8,11 இந்த ஸ்தானங்களை தான் பொருத்தங்கள் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டும். மாறாக சம்மந்தமே இல்லாத தின பொருத்தம், இருக்கிறதா, கண பொருத்தம் இருக்கிறதா, யோனிப் பொருத்தம் இருக்கிறதா, மாங்கல்ய பொருத்தம் இருக்கிறதா என்று பார்ப்பது சரியல்ல.

“ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்” என்பார்கள். இது இல்லாத ஊருக்கு வழி சொல்லுவது போன்றதாகும். எங்கோ பிறந்த பொண் யார் வீட்டிலோ வாக்கப்பட்டு வந்த நேரத்தில் (சில மாதத்தில்) மாமனார் இறந்து விட்டால் அந்த பெண் மீது களங்கம் கற்பிப்பார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது.

இன்னும் ஒரு கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் வாசக பெருமக்களே! “பரணி நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான் என்பதும்! அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன் வீட்டில் தவிட்டு பானை எல்லாம் தங்கமாம்” என்பார்கள்.

எங்கோ ஒருவன் பரணி நட்சத்திரத்தில் பிறந்து தரணி ஆண்டான் என்பதற்காக பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களெல்லாம் நாட்டை ஆள முடியுமா? எனக்கு தெரிந்து பரணி நட்சத்திரத்தில் பிறந்து வீட்டைக்கூட ஆள முடியாமல் ஊரை விட்டு ஓடியவர்கள் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்து சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவோரையும் பார்த்திருக்கிறேன்