மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு நாட்களில் 11975 பேரு தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த நான்கு தினங்களில் இம்மாவட்டத்தில் 11975 பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதில் பொது மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எவ்வித அச்சமுமின்றி அதிகளவானோர் தடுப்பூசி ஏற்ற வருகை தருகின்றனர். தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களும் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பேண வேண்டும். முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இம்மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.

சினோபாம் வகை தடுப்பூசிகள் முதல் கட்டத்தின் கீழ் இம்மாவட்டத்திற்கு 25000 வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.