மிக நீண்ட நாட்களின் பின் பொதுவெளியில் தோன்றி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அதிபர் கிம் ஜொங்!! (படங்கள் இணைப்பு)

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், இறந்து விட்டதாவும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அந்த நாட்டு அரச ஊடகம் அறிவித்தது.அவர் நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டது. தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழா நேற்று (1) நடைபெற்றது. இதில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்ததாக அரச ஊடகம் தெரிவித்தது.அப்போது கிம் உடல் சற்று மெலிந்து காணப்பட்டதாகவும், வோஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக கிம் பற்றி வெளியான வதந்திகளிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15ம் திகதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும் விழாவாக கொண்டாடப்படும்.இந்த விழாவில் வடகொரிய ஜனாதிபதி உள்பட உயர் அதிகாரிகள் பங்கேற்பது வழக்கம். 2011ம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து முதன்முறையாக கிம் ஜாங் உன் பங்கேற்காமல் இருந்துள்ளார். முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது.எனினும், அண்டை நாடான தென்கொரியா இணைய பத்திரிகையான டெய்லி என்.கே வெளியிட்ட செய்தியில், ஏப்ரல் 12ம் திகதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ளது. அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக கிம்மின் இதய பாதிப்பு ஏற்பட்டது.தற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தது.இதேவேளை, கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அனைத்து வதந்திகளிற்கும் தற்போது முற்றுப்புள்ளியிடப்பட்டுள்ளது.