கண்டியில் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை

கண்டியில் கொவிட் தொற்றாளர் ஒருவருக்கு அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

மரத்திலிருந்து விழுந்தால் முதுகெலும்புக்கு கடுமையாக சேதமடைந்த 60 வயதான கொவிட் தொற்றாளருக்கே இந்த சத்திரசிசிக்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உடலில் ஒக்ஸிஜன் அளவு குறைவான இருந்ததுடன் மயக்கமடைய செய்ய முடியாத கட்டத்தில் கடும் அவதானமிக்க நிலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கண்டி வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுனந்த உடகெதர தலைமையிலான குழுவினரால் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3 மணித்தியாலங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சையில் 6 விசேட வைத்தியர்கள் பங்கேற்றனர்.

சாதாரண நிலையில் இருக்கும் நபர் ஒருவருக்கே முதுகெலும்பு சத்திரசிகிச்சை செய்வதென்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் இந்த நபருக்கு கொவிட் தொற்றியிருந்ததுடன், அவரது உடலில் ஒக்ஸிஜன் அளவு நூற்றுக்கு 80 வீதம் குறைவடைந்திருந்ததுடன், அவரை மயக்கமடைய செய்து சத்திரசிகிச்சை செய்வதென்பது விசேட காரணம் ஒன்றாகும் என விசேட வைத்தியர் சுனன்ந்த உடகெதர தெரிவித்துள்ளார்.

ஏணி ஒன்றின் உதவியுடன் பலாக்காய் பறிக்க சென்ற போது கீழே விழுந்தமையினால் குறித்த நபரின் முதுகெலும்பு பாரிய சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதுவரையில் அவரது பாதங்கள் செயலற்ற நிலையில் காணப்பட்டமையினால் சத்திரசிகிச்சை வேண்டிய கட்டாய நிலைமை காணப்பட்டது.

இரண்டு பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட குறித்த நபருக்கு ஒக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டுள்ளது. எனினும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.