பிரியா – நடேஸ் குடும்பத்தை நியூசிலாந்து, அமெரிக்காவில் குடியமர்த்த திட்டம்!

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பிரியா – நடேஸ் குடும்பம் நியூசிலாந்து அல்லது அமெரிக்காவில் குடியமர்த்தப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குடும்பத்தை எங்கே குடியமர்த்துவது என்பது தொடர்பில் உள்துறை அமைச்சர் Karen Andrews-இன் அலுவலகம் ஆராய்ந்துவருவதாகவும், ஆனால் இவர்களை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது தொடர்பில் ஆராயப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் Marise Payne தெரிவித்துள்ளார்.

Nine Radio-வுக்கு வழங்கிய நேர்காணலில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் ஆராயப்படுவதாக கூறினார்.

இதற்கு மேலதிகமாக எவ்வித தகவல்களையும் வழங்குவதற்கு அமைச்சர் Marise Payne மறுத்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா அல்லது நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதென்பது ‘ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் பொருந்தும்'(தகுதிபெற்றவர்கள் மட்டும்) என உள்துறை அமைச்சர் Karen Andrews வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கே முன்னுரிமையளிக்கப்படுவதாகவும், நியூசிலாந்து இரண்டாவது தெரிவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரியா-நடேஸின் இரண்டாவது மகள் தருணிகா மருத்துவசிகிச்சைக்காக பெர்த்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள பின்னணியில் தமது குடும்பத்தை குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ அனுமதிக்குமாறு பிரியா வேண்டுகோள் விடுத்த சிலமணி நேரங்களில் அமைச்சர் Marise Payne-இன் கருத்து வெளியாகியுள்ளது.

தருணிகாவுக்கு குருதித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் பெர்த் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.

கிறிஸ்மஸ் தீவில் கடந்த பத்து நாட்களாக தருணிகா கடும் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் இதனை அடுத்து மேலதிக சிகிச்சைக்கு கிறிஸ்மஸ் தீவு மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் பெர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பிரியா- நடேஸ் தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு மகள்கள் கோபிகா மற்றும் தருணிகா ஆகியோரது தடுப்புமுகாம் வாழ்க்கை கடந்த மார்ச் மாதத்துடன் மூன்று ஆண்டுகளை எட்டியிருந்தது. குறிப்பாக 3 வயதான தருணிகா தனது வாழ்க்கை முழுவதையும் தடுப்பு முகாமிலேயே கழித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இவ்வளவு நீண்டநாட்கள் தடுப்புமுகாமிலிருக்கும் குழந்தையாக தருணிகா உள்ளார் என குறிப்பிடப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் 2018 ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

2018 மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்ட வேளையில் சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2018 ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை 2018 டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது. பின்னர் இக்குடும்பம் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் நிராகரிக்கப்பட்டது.

இப்படியாக சுமார் ஒன்றரை வருடங்களாக இக்குடும்பம் மெல்பனிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் குழந்தை தருணிகா சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் கடைசி நிமிட தடை உத்தரவை பிறப்பித்ததைத் தொடர்ந்து விமானம் டார்வினில் தரையிறங்கிய போது குடும்பம் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தருணிகாவின் பாதுகாப்பு குறித்தும், தருணிகாவின் சூழ்நிலைகளை உள்துறை அமைச்சர் மதிப்பீடு செய்திருக்க வேண்டுமா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், பிரதான விண்ணப்பதாரியான தருணிகாவின் விண்ணப்பம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் இவ்விசாரணை முடியும் வரை அவர் நாடுகடத்தப்படக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

தருணிகா குழந்தை என்பதால் அவரிடமிருந்து பெற்றோரை தனியாகப்பிரித்து நாடுகடத்தமுடியாது என்பதால் முழுக்குடும்பமும் நாடுகடத்தலிலிருந்து தப்பித்து தொடர்ந்தும் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.