கொரோனாவின் எதிரொலி…உறவினர்கள் எவரும் இல்லாமல் நடந்த திருமணம்..!! (வைரலாகும் புகைப்படம்)

கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளிற்காக மட்டும் வீடுகளை விட்டு வெளியே சிலர் அனுமதிக்கப்படுகிறார்கள்.


திடீரென பரவிய கொரோனா பரவலால் உலகெங்குமே முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பாதிக்கப்பட்டன. இலங்கையிலும் அதுதான் நிலைமை. பொலிசாரின் முன் அனுமதி பெற்று, வரையறுக்கப்பட்டவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
உலகெங்கும் இதுதான் நடைமுறை. அதிலும், கொரொனா தாண்டவமாடிய நாடுகளில் இன்னும் நிலைமை மோசமாக இருந்தது.கொரொனா மையம் கொண்டிருந்த அமெரிக்காவில் நடந்த திருமணமொன்று இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.அங்குள்ள தேவாலயமொன்றில் நடந்த திருமணத்தில், பார்வையாளர் வரிசையில் ஆட்களிற்கு பதிலாக அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு திருமணம் நடைபெற்றது.கடந்த சனிக்கிழமை சான் பிரான்சிஸ்கோவின் சென்ட் இக்னேஷியஸ் தேவாலயத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. பாரிஸ் காச்சி – எமிலி மனாஷி ஜோடி அன்று திருமண பந்தத்தில் இணைந்தது. இரண்டு குடும்பங்கள் சார்பில் நேரடி இரத்த பந்தங்கள் சிலர் மாத்திரமே திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.ஆனால், மண்டபம் முழுவதும் புன்னகையுடன் கூடிய விருந்தினர்களின் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.கொரொனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கலிபோர்னியாவிலும் ஆட்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு விடுக்கப்பட்டதும், முன்கூட்டிய திகதி நிச்சயிக்கப்பட்ட தமது திருமணம் குறித்து என்ன முடிவெடுப்பது என்பதில் குழப்பமிருந்ததாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.எனினும், பின்னர் காலவரையறையின்றி திருமணத்தை ஒத்திவைப்பதில்லையென குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அபாய காலகட்டத்தில் எப்பொழுது, என்ன நடக்குமென்பது தெரியாததால், சுபகாரியத்தை தள்ளி வைக்காமல், திட்டமிட்டபடியே முடிப்பதென குடும்பத்தினர் தீர்மானித்தனர்.அதேநேரம், ஆட்களை கூட்டி திருமணம் செய்து, ஆபத்தை விலைக்கு வாங்கவும் விரும்பவில்லை. அதனால் மிக எளிமையாக, இரண்டு குடும்பத்தின் உறவினர்களுடன், மிக எளிமையாக திருமணத்தை நடத்துவதென தீர்மானித்தனர்.உறவினர்கள், நண்பர்களிற்காக சமூக ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்வதென்றும் தீர்மானித்திருந்தனர்.திருமண நிகழ்விலன்று, அவர்கள் தேவாலயத்திற்கு சென்றபோது, எதிர்பாராத காட்சியொன்றை கண்டனர்.தேவாலயத்திற்கு வழக்கமாக ஆராதனைக்கு செல்பவர்களின் புன்னகைக்கும் புகைப்படங்களை பெற்று, அதை ஆசனங்களில் ஒட்டி வைத்திருந்துள்ளது தேவாலய நிர்வாகம்.அத்துடன், தேவாலய நிர்வாகமும் அந்த திருமண நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்தது.மிகச்சிலருடன் நடந்தாலும், அந்த திருமணம் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. திருமண படங்களை எடுத்த புகைப்பட கலைஞர், தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது, ஆயிரக்கணக்கானவர்கள் அதை பகிர்ந்துள்ளனர்.தனது வாழ்நாளில் படம்பிடித்த அரிய திருமண நிகழ்வு இதுவென குறிப்பிட்டுள்ளார்.