கனடாவில் வாகனத் தாக்குதலில் 4 பலி!

கனடாவில் “முன்கூட்டியே” திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வாகனத் தாக்குதல் ஒன்றில் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒன்ராறியோ மாகாணத்தின் லண்டன் நகரில் இந்த தாக்குதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இதன்போது குறித்த குடும்பத்தின் ஒன்பது வயது சிறுவன் மாத்திரம் உயிர் தப்பினார். எனினும் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து 40 வயதான கனேடிய மனிதர் மீது நான்கு கொலை குற்றச்சாட்டுக்களும் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் கியூபெக் நகர மசூதியில் ஆறு பேர் கொல்லப்பட்டதன் பின்னர் கனேடிய முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான தாக்குதல் இது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களை குறிவைப்பதாக நம்பப்படுகிறது என்று கனடாவின் துப்பறியும் கண்காணிப்பாளர் போல் வெயிட் நேற்று ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்தார். இது வெறுக்கத்தக்க குற்றம் என்றும் அவர் கூறினார்.

பலியானவர்கள் 74 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்கள் – 46 வயது ஆண் மற்றும் 15 வயது சிறுமி. குடும்பத்தின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை ஒன்பது வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.