கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய்- என்னதான் காரணம்?

கொரோனா வைரஸ் ஒருபுறம் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் போது, கனடாவின் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள மக்களிடையே அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு மர்மமான மூளை நோய் பரவி பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த மூளை நோய் எங்கிருந்து பரவுகிறது என்பது இன்னும் அறியப்படவில்லை என்றாலும், இது கனடாவின் பல மருத்துவ நிபுணர்களையும், உயர் நரம்பியல் நிபுணர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மூளை நோயால் இறந்தவர்கள் எல்லாம் கனவில் வருவதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த கொடிய மற்றும் மர்மமான மூளை நோயால் 6 பேர் இறந்துள்ளார்கள். இப்படி காரணம் எதுவுமே தெரியாமல் பரவும் மூளை நோயால் விஞ்ஞானிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

செல்போன் கதிர்வீச்சு ஓர் காரணம்

மர்மமான மூளை நோய்க்கான காரணத்தைக் கண்டறிய நரம்பியல் நிபுணர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்கள். சிலர் விஞ்ஞானிகள் செல்போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் இந்நோய் பரவுவதாக தெரிவிக்கின்றனர். அதே சமயம், இந்நோய்க்கு கோவிட் தடுப்பூசி தான் என்று சில விஞ்ஞானிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இந்நோய் எதனால் பரவுகிறது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை.

6 பேர் இறந்துள்ளனர்

இந்த மூளை நோய் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை 48 பேர் இந்த மூளை நோயின் பிடியில் சிக்கி, அவர்களுள் 6 பேர் இறந்துள்ளனர். கடந்த 15 மாதங்களாக கொடிய கொரோனா வைரஸின் தாக்கத்தால், உலக நாடுகள் சிக்கி கஷ்டப்பட்டு வருகிறது. கனடாவில் கூட கொரோனா பரவ ஆரம்பித்ததும், அங்குள்ள சுகாதார துறை அதிகாரிகள் இந்த மூளை நோயை மறந்துவிட்டனர். தற்போது இந்த மூளை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நோயுடன் தொடர்புடைய அறிகுறிகள்

இந்த நோய் மூளையை பாதிப்பதால், இது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது. அதில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை மற்றும் நினைவாற்றல் செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதுடன், ஒரு மாய தோற்றத்தையும் அனுபவிப்பதாக புகாரளித்துள்ளனர். சிலர் தூக்கத்தில் இறந்தவர்களைக் காண்பதாகவும் கூறுகிறார்கள்.

மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட தகவல்

இந்த மர்மமான மூளை நோய் குறித்த தகவல்களை மார்ச் மாதத்தில் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு தெரிவித்தார். மேலும் அறிவியலில் என்ன தான் அசாதாரண முன்னேற்றத்தைக் கண்ட போதிலும், மன நோய்கள் அல்லது நரம்பியல் தொடர்பான நோய்கள் குறித்த அறிவைப் பொறுத்தவரை நாம் இன்னும் பின்தங்கியிருப்பதாகவும் கூறினார்.