உங்களுக்கு கொரோனா இருக்கா? இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க ஆபத்து!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதோடு, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். உலகெங்கிலும் கொடிய தொற்றுநோய் பரவிக் கொண்டிருந்தாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். கொரோனா வைரஸ் முதலில் ஒருவரது வலிமையை பாதிக்கிறது. எனவே தான் தொற்று ஏற்பட்டதும் பலவீனமாக உணர்கிறோம். ஆனால் ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், அது நாள்பட்ட நோய்கள் மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

தற்போது கொடிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், நாம் இந்த வைரஸ் தொற்று குறித்த பல விஷயங்களை ஊடகங்களில் படித்து தெரிந்து கொண்டிருப்போம். ஆனால் கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கி சோதனையில் பாசிடிவ் என்ற முடிவைப் பெற்றுவிட்டால், அந்த தொற்றில் இருந்து விரைவில் மீள வேண்டுமானால் எந்த மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள மறந்திருப்போம். எனவே கொரோனா உள்ளவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது என அந்த உணவுகளின் பட்டியலைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்வதோடு, உங்கள் நண்பர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு அதிகமாக உள்ளதால், இந்த வகையான உணவுகளை கொரோனா நோயாளி சாப்பிடும் போது, அது அந்நோயாளியின் உடலினுள் வீக்கம் மற்றும் அமிலத்தன்மையால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இது அசௌகரியத்தை உண்டாக்கி, மேலும் சிக்கல்கள் அல்லது வாந்தி, வயிற்று தொற்று போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். ஒரு நாளைக்கு ஒருவர் நற்பதமான உணவுடன் 5 கிராமுக்கும் குறைவான உப்பை சேர்த்துக் கொள்ள உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. மேலும் வெளி உணவுகள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது சுகாதாரமற்றதாக இருக்கலாம்.

அதிகப்படியான கொழுப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும்

சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிகமாக இருந்தால், அது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் கொரோனா இருப்பவர்கள் இம்மாதிரியான உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியத்தை படுமோசமாக பாதித்துவிடும். பொதுவாக உடல்நலம் சரியில்லாதவர்கள் தங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலில் 10%-க்கும் அதிகமான கெட்ட கொழுப்புக்கள் இருக்கக்கூடாது. வேண்டுமானால், முட்டை, அவகேடோ மற்றும் உலர் பழங்கள், முந்திரி, பாதாம் போன்ற நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ கூடாது

வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் போது புகைப்பிடித்தால், அது சுவாச பிரச்சனைகள், பக்கவாதம், உடலில் ஆக்சிஜன் அளவு குறைதல் மற்றும் நுரையீரலை மோசமாக பாதிக்கும். அத்துடன் மரு அருந்தினால், அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும்.

காரமான உணவுகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இருமல், காய்ச்சலால் அவதிப்படுவார்கள். ஒருவருக்கு இருமல், காய்ச்சல் இருக்கும் போது வாய்க்கு ருசியான நல்ல காரசாரமான உணவை உண்ண ஆவல் எழும். ஆனால் இம்மாதிரியான சூழ்நிலையில் காரமான உணவுகளை உண்டால், அது தொண்டையில் கடுமையான எரிச்சலை உண்டாக்கி, இருமலை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது. வேண்டுமெனில், சூடான சூப்பில் மிளகுத் தூள் சேர்த்து குடியுங்கள். இது சற்று நிவாரணத்தை அளிக்கும்.