மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கோவிட் தொற்று உறுதி

திருகோணமலை – கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பெண்ணுக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் விடயத்துக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை ,கடந்த மாதம் அதே இடத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் சமூக இடைவெளிகளை பேணுமாறும், தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணியுமாறும் பொதுமக்களிடம் சுகாதார திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.