கொரோனா தடுப்பூசி போட பயப்படுறீங்களா? முதல்ல இதை தெரின்சுக்கோங்க!

கொரோனா தொற்று மக்களிடையே வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு மிகவும் கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது உருமாற்றமடைந்து பரவும் கொரோனாவால் ஏராளமான மக்கள் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே சிறப்பான வழி, கொரோனா வைரஸிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.

தடுப்பூசிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கும் போது, மறுபுறம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா இல்லையா என்ற எண்ணத்துடன் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துடன் இருக்கின்றனர். ஆரம்பத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதோடு இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சிக் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்படுகிறது. அதோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு மக்களுக்கு போடப்படவுள்ளது.

கட்டுக்கதை 1 : தடுப்பூசியால் மரணம் ஏற்படலாம்

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு பிரெஞ்சு வைராலஜிஸ்ட் மற்றும் நோபல் பரிசு வென்ற லூக் மொன்டாக்னியர் மேற்கோள் காட்டி, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போட்ட அனைவரும் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ உண்மையானதா என சரிபார்க்கப்பட்டதில், போலியானது என தெரிய வந்தது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, தடுப்பூசிகள் எப்போதும் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே இம்மாதிரியான போலியான கூற்றுக்களை நம்ப வேண்டாம்.

கட்டுக்கதை #2 : தடுப்பூசிகள் கொரோனா தொற்றை ஏற்படுத்தும்

தடுப்பூசி போடுவது கோவிட் தொற்றை ஏற்படுத்தாது. உண்மையில் தடுப்பூசிகள் உடலில் உள்ள ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குகின்றன. ஆகவே தடுப்பூசி பெற்ற பின் ஒருவருக்கு கொரோனா தொற்று பிடித்தாலும், உடலில் உள்ள ஆன்டிபாடிகள் கிருமியை எதிர்த்து சண்டையிட்டு, நோயாளியை எளிதில் மீட்க உதவும்.

கட்டுக்கதை 3 : தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

கொரோனா தடுப்பூசிகளின் பக்கவிளைவுகள் ஒருசிலருக்கு காணப்படுகின்றன. ஆனால் இந்த பக்கவிளைவுகள் நீண்ட காலம் நீடித்திருக்காது. தடுப்பூசியின் பொதுவான பக்கவிளைவுகளில் காய்ச்சல், உடல் வலி மற்றும் ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் புண் ஆகியவை அடங்கும். இதுதவிர தடுப்பூசி வேறு எந்த கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தாது.

கட்டுக்கதை 4 : தடுப்பூசி போடுவது எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்கும்

இந்த மாதிரியான கருத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது ஒரு வதந்தியாகவே மக்களிடையே பரவியுள்ளது. இம்மாதிரியான ஆதாரமில்லாத கருத்துக்களில் எந்த ஒரு கவனத்தையும் செலுத்த வேண்டாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் 16 வயதிற்குள் 15 தடுப்பூசிகளை பெறுகிறார்கள். கோவிட்-19 தடுப்பூசி ஒன்றும் மக்களுக்கு போடும் முதல் தடுப்பூசி அல்ல. எனவே இதனால் எந்த பயமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.