மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்படடவர் திடீர் மரணம்

மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இளைஞர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பொலிஸார் குறித்த வீட்டைச் சுற்றிவளைத்து 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்பவரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை தடுப்பு காவலில் வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் வீட்டின் முன்னால் பொதுமக்கள் ஒன்று கூடியதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில் பொலிஸார் சென்று நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

அதேவேளை, சிவில் உடையில் சிஜடியினர் வீட்டிற்கு வந்து எனது மகனைக் கைது செய்துள்ளனர். அவர் கஞ்சா விற்பனை செய்வதாக தெரிவித்து வீட்டைச் சோதனையிட்ட போதும் அவர்கள் இங்கிருந்து எதையும் எடுக்கவில்லை. எனது மகனுக்கு வருத்தம் எதுவும் இல்லாது நன்றாக தான் இருந்தார். பொலிஸார் இரவு கொண்டு சென்றதன் பின்னர் காலையில் உயிரிழந்ததாக அறிந்தோம். பொலிஸார் அடித்ததால் தான் அவர் இறந்திருக்க வேண்டும் என உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேரடியாகச் சென்று பார்வையிட்டு பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.