சர்க்கரை நோய், இதய நோய்,எதுவும் வரக்கூடாதா? தினமும் 15 நிமிஷம் இத செய்யுங்க

ஒவ்வொரு வருடமும் ஜூன் 3 ஆம் தேதி உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. இரண்டு நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ள சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகளை உணர்த்தும் வகையில் உலக சைக்கிள் தினம் கொண்டாடப்படுகிறது. பழங்காலம் முதலாக ஓட்டி வரும் சைக்கிள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது

சைக்கிளிங் பயிற்சி உடலை சீராகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. ஒருவர் தினமும் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தால், அது வழங்கும் நன்மைகளோ ஏராளம். மேலும் சைக்கிளானது அன்றாடம் அலுவலகம், பள்ளி அல்லது பூங்கா போன்ற இடங்களுக்கு பயணிக்க ஏற்றது. சைக்கிளிங் செய்வது உடல் மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இப்போது ஒருவர் தினமும் சைக்கிள் ஓட்டுவதால் பெறும் அற்புதமான சில ஆரோக்கிய நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

எடை இழப்பு

சைக்கிள் ஓட்டுவது அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் வளர்சிதை மாற்ற அளவை அதிகரிக்கவும், தசையை உருவாக்குவதற்கும், உடல் கொழுப்பைக் குறைக்கவும் பொருத்தமாக இருக்கும் ஒரு சிறப்பான வழியாகும். ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டுவது, தீவிரம் மற்றும் ஓட்டுபவரின் எடையைப் பொறுத்து, 400-1000 கலோரிகளை எரிக்க உதவுவதாக கூறப்படுகிறது. எனவே நீங்கள் உங்கள் எடையைக் குறைக்க விரும்பினால், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துடன், தினமும் சைக்கிளையும் ஓட்டுங்கள்.

இதயத்திற்கு நல்லது

சைக்கிளிங் இதய தசைகளை வலுவாக்கவும், இதய துடிப்புக்களைக் குறைக்கவும் மற்றும் கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. எப்படியெனில் சைக்கிள் ஓட்டும் போது, இதயம், நுரையீரல் மற்றும் இரத்த ஓட்ட சுழற்சி தூண்டப்பட்டு மேம்படுகிறது. ஆகவே இது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. டேனிஷ் ஆய்வின் படி, வழக்கமான சைக்கிளிங் 20-93 வயதுடையவர்களை இதய நோயில் இருந்து பாதுகாக்க உதவும்

புற்றுநோயைத் தடுக்கும்

சைக்கிளிங் செய்வது மார்பகம் மற்றும் குடல் புற்றுநோய் போன்ற குறிப்பிட்ட புற்றுநோயிகளின் அபாயத்தைக் குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. உண்மையில் பல ஆய்வாளர்கள் புற்றுநோய்க்கும், வழக்கமான உடற்பயிற்சிக்கும் இடையிலான தொடர்பை நிரூபித்துள்ளனர்

சர்க்கரை நோயின் அபாயம் குறையும்

போதுமான உடல் செயல்பாடு இல்லாமை சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பின்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான ஆராய்ச்சி, ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 40 சதவீதம் குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.