கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படவேண்டும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிகள் மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

இதனை சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் கலாநிதி ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி தாய்மார் விடயத்தில், ஏனைய தடுப்பூசிகள் குறித்து போதுமான தகவல்கள் இல்லாததால், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இராணுவத் தளபதி அறிவித்த போதிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி கொடுப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கலாநிதி ஹெரத் கூறியுள்ளார்.

குடும்ப சுகாதார பணியகம் அவற்றை வரிசைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான செயல்முறையாக இருப்பதால், குடும்ப சுகாதார பணியகம் இன்னும் வழிகாட்டுதல்களை உருவாக்கி வருகிறது” என்று ஹெரத் கோடிட்டுக் காட்டினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடுவது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்,

மேலும் இது தொடர்பான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய சிறிது நேரம் எடுக்கும் என்றும் அதன் பின்னரே கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துதலை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சில கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சின் முறையான ஒப்புதல் இல்லாமல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.