வெங்காயத்தின் மூலமாக கருப்பு பூஞ்சை பரவுகிறாதா? மருத்துவர்களின் எச்சரிக்கை!

கருப்பு பூஞ்சை நோய் என்பது மியூகோர்மைக்ரோசிஸ் என்ற நுண்ணிய பூஞ்சை கிருமியால் பரவுகிறது. இது சாதாரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை இந்த நோய் தாக்கும் என்றாலும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஸ்டீராய்டு மருந்தை அதிகளவில் எடுத்துக்கொண்டவர்களை இந்நோய் எளிதில் தாக்கும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு உண்டாகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்நோய் கண்களை பாதித்து அதன் பிறகு மூளைக்கும் பரவி இறப்புக்கு காரணமாகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 7000க்கும் மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இந்த கருப்பு பூஞ்சை விவகாரத்தினால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் வெங்காயத்தின் மூலமாகவும், வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ரப்பரில் காணப்படும் கருப்பு பூஞ்சை ஆகியவை மூலம் கருப்பு பூஞ்சை வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

ஆனால், இதனை மருத்துவ நிபுணர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. கருப்பு பூஞ்சை தொற்றானது காய்கறிகள் மற்றும் பொருட்கள் மூலம் பரவாது என தெரிவித்துள்ளனர்.

மேலும், வெங்காயத்தில் காணப்படும் கருப்பு மேற்புறத்தோலானது தரையில் வளரும் பூஞ்சையால் ஏற்படுகிறது. இது மனிதர்களை தாக்கும் கருப்பு பூஞ்சை அல்ல. நீண்ட நேரம் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டாலோ அல்லது அதிக வெப்பநிலை காரணமாக இதுபோன்ற பாக்டீரியா உருவாகுவது இயல்பான ஒன்றுதான் என விளக்கம் அளித்துள்ளனர்.