யாழில் ரூ. 5000 கொடுப்பனவு புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது!

பயணத்தடை விதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் தேவைகள் கருதி குறைந்த வருமானம் பெறுகின்ற மற்றும் சமுர்த்திப் பயனாளிகள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்ற நடவடிக்கை நாளைமறுதினம் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இணையவழி மூலம் இன்று நடைபெற்ற யாழ். மாவட்ட கொரோனாக் கட்டுப்பாட்டுக் குழுக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த இணையவழிக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர், உதவி மாவட்ட செயலர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணி சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலில் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டதுடன், முக்கிய சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்ட இடங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கும் உணவு உற்பத்தி பொருட்கள், மரக்கறிகள் விரைந்து வழங்கப்படல், கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களை அதிகரிக்க பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுத்தல், 5000 ரூபா கொடுப்பனவு எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படுதல், தடுப்பூசி வழங்கும் மையங்களை கிராம சேவகர் பகுதிகளுக்கு அருகில் செயற்படுத்தல், கிராமியக் குழுக்களின் மூலம் தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், கொரோனா காலகட்டத்தில் சேவையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்குக் கையுறை, முகக்கவசம் தடையில்லாமல் வழங்குதல், சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாது தடைப்பட்டுள்ளவர்கள் தற்போது உள்ள இடத்தின் கிராம சேவகர்களூடாக உறுதிப்படுத்தி அவர்களை சொந்த இடத்துக்குச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அத்தியாவசியப் பொருட்களுக்கான வியாபரிகளுக்குப் ‘பாஸ்’ அனுமதி வழங்குதல், கீரிமலை அந்தியேட்டி மடத்துக்கான அனுமதியை இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளித்தல், பழப்பொருட்களை நடமாடும் விற்பனை மூலம் விநியோகிக்க அனுமதி வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் துரிதமாகவும் உரிய நடைமுறைகளுக்கு அமையவும் இவற்றை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமாறும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.