சுமார் நான்கு மணி நேரத்தில் கொழும்பு நகருக்குள் நுழைந்த 55,944 வாகனங்கள்!

சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வாகனங்கள் கொழும்பு நகரிற்குள் பிரவேசித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 20,440 வாகனங்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு சென்ற 7,000 வாகனங்கள், உணவு வழங்கும் 4,760 வாகனங்கள், நோயாளிகளைக் கொண்டு செல்லும் 8,232 வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான 8,232 வாகனங்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி 3,528 வாகனங்கள் கொழும்புக்குள் நுழைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், பயணக் கட்டுப்பாடுகளை மீறிய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் தொடர்பில் இன்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படும், அத்துடன், முன்னுரிமை பெற்ற அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் நபர்கள் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளை விற்கும் வாகனங்கள் உப பாதைகளில் பயணிப்பதில்லை என்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தால் பிரதேச செயலாளர்களால் வழங்கப்படும் அத்தகைய விற்பனையாளர்களின் பயண அனுமதிகளை இரத்து செய்ய பொலிஸ்துறை நடவடிக்கை எடுக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.