அசைவம் உண்பவர்களுக்கும் சைவ உணவுப் பிரியர்களுக்கும் ஜோதிட ரீதியில் உள்ள வேறுபாடுகள்….

ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத்தின் இரண்டாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகத்தைக் கொண்டு, அவா் சைவ விரும்பியா? அசைவ விரும்பியா? என்பதை அறிய முடியும்.உடலை வளர்ப்பது உணவு என்பதால், உயிர் வாழ உணவு மிக அவசியம். பசிக்கு உணவு சாப்பிட்ட காலம் சென்று ருசிக்கு உணவு என்ற நிலை ஏற்பட்டு விட்டது. சமையல் கலை என்ற உணவுத் தொழில் மனித இனத்தையே உணவின் ருசிக்கு அடிமைப்படுத்திவிட்டது. வகைப்படுத்த முடியாத வித விதமான உணவுகளால் விதவிதமான நோய்களும் பெருகுகிறது. பொதுவாக ஒருவரின் உணவு பழக்கம் என்பது பெற்றோர்களின் வழக்கம், வாழுகின்ற சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.மனிதர்கள் விரும்பி உண்ணும் உணவில் சைவ உணவை விட, அசைவ உணவே அதிகம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த நிலையில் இறை நம்பிக்கை உள்ளவர்கள், அசைவம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத்தின் இரண்டாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகத்தைக் கொண்டு, அவா் சைவ விரும்பியா? அசைவ விரும்பியா? என்பதை அறிய முடியும். இரண்டு, ஒன்பதாம் இடம் சம்பந்தம் உள்ளவர்கள் எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரிய குல வழக்கத்திற்கு மாறான உணவை சாப்பிட மாட்டார்கள்.ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இரண்டாம் இடத்தோடு சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெறுபவர்கள், அசைவ உணவை விரும்பி சாப்பிடுவதுடன், சூடான, காரமான சுவையான உணவை மட்டுமே உண்பார்கள்.இரண்டாம் இடத்தோடு, சந்திரன் சம்பந்தம் பெறும் போது குளிர்ச்சியான, திரவ உணவின் மீது விருப்பம் இருக்கும். சைவம், அசைவம் என கிடைப்பதை உண்டு மகிழ்வார்கள்.இரண்டாம் இடத்துடன் புதன் சம்பந்தம் பெற்றிருந்தால், இயற்கை உணவுகள், கீரைகள், பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் மீது விருப்பம் மிகுதியாக இருக்கும். புதன் நின்ற வீட்டிற்கு ஏற்ப சைவ, அசைவ உணவின் விருப்பத்தில் மாற்றம் இருக்கும்.குரு, இரண்டாம் இடத்துடன் சம்பந்தம் பெற்றிருப்பின், கொழுப்பு சத்து மிகுந்த இனிப்பு உணவை மிகுதியாக உண்பார்கள். பெரும்பாலும் அசைவ உணவை ஒதுக்குவார்கள். இளவயதில் அசைவம் சாப்பிட்டாலும், மத்திம வயதிற்கு பின்பு சுத்தமான சைவ உணவை மட்டுமே விரும்புவார்கள்.இரண்டாம் இடத்தோடு, சுக்ரன் சம்பந்தம் பெற்றி ருந்தால், இனிப்பு வகைகள், சைவ உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் இருக்கும்.இரண்டாம் இடத்தோடு சனி சம்பந்தம் பெறுபவர்கள், பழைய உணவின் மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலும் அசைவம் இல்லாத உணவை சாப்பிட மாட்டார்கள்.ராகு இரண்டாம் இடத்துடன் இணைவு பெற்றிருந்தால், சூடான, சுவையான, காரமான அசைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் கேதுவோடு சம்பந்தம் பெற்றிருந்தால், அவர்கள் சைவ உணவை மட்டுமே உண்பார்கள்.உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் பிறவியின் அடிப்படையில் பகுத்தறியும் தன்மை உண்டு. அந்த அடிப்படையில் மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்ற தாவர இனங்கள், ஓரறிவு கொண்ட உயிரினங்கள். இவைகளால் சுயமாக சிந்திக்கும் திறன் கிடையாது. மேலும் கர்ம வினைப் பதிவு மிக மிக குறைவு. விலங்குகள் மற்றும் பறவைகளால் சுயமாக சிந்திக்க முடியும். அதனால், அவைகளுக்கு ஐந்தறிவுடன் கர்ம வினைப் பதிவும் உண்டு.

மனிதர்களுக்கு ஆறறிவு உண்டு. பல ஜென்மங்களின் செய்த பல்வேறு விதமான பாவங்களே ஜனன ஜாதகத்தில் கிரகங்களாக அமர்ந்து, மனிதப் பிறப்பிற்கு காரணமாக இருக்கிறது. கர்மப் பிடியில் இருந்து விடுபட்டு பிறவா பெருநிலை அடைவதே மனித பிறப்பின் நோக்கம். தன் ஆறாம் அறிவால் சிந்தித்து செயல்பட்டு, தன் கர்ம வினையை குறைக்கவோ, அதிகரிக்கவோ முடியும்.உணவுக்கும், இறைவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அசைவ உணவு சாப்பிடுபவர்களை கடவுள் தண்டிப்பார், கோபிப்பார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உணவிற்கும் உடலுக்கும் சம்பந்தம் உண்டு. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்பந்தம் உண்டு. உணவுக்கும் குணத்திற்கும் சம்பந்தம் உண்டு. உணவுக்கும் வாழ்விற்கும் சம்பந்தம் உண்டு. உணவுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு. உணவுக்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு. மனதிற்கும் இறைவனுக்கும் சம்பந்தம் உண்டு.உடலாலும் உயிராலும் மனித பிறவி சைவம். குணத்தால் மனித பிறவி, அசைவம் மற்றும் சைவம் கலந்த கலவை. தாவர உணவுகளுக்கு கர்ம பதிவுகள் குறைவு என்பதால், சைவ உணவை உண்ணும் போது இறையுணர்வு மிகுதியாகி வினைப் பதிவு குறைந்து பிறவா நிலையை எளிதில் அடைய முடியும் என்பது நம்பிக்கை. ஒரு உயிரை மனிதன் கொன்று உண்டால் அந்த உயிர்களின் கர்ம வினைகள், சாப்பிடும் மனிதர்களின் கர்மாவோடு கலக்கும்.அந்த உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே சுமக்க வேண்டும். அந்த உயிர்களின் கர்ம தோஷத்தையும் சேர்த்து தீர்க்க வேண்டும்.மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது. ஓரறிவு உள்ள தாவர வகைகளான காய், கனி வகைகள் மட்டுமே மனிதர்களுக்காக படைக்கப்பட்டது. உயிரை வளர்ப்பது தர்மம். இந்த வாய்ப்பு பாவமற்றவருக்கும், துன்பத்தில் இருந்து விடுபட முயற்சிப்பவர்களுக்கும் கிடைக்கும். உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்து கொண்டிருப்பார்கள்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி