மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதேசத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு – கிரான்குளம் பிரதேசத்தில் மதுபானசாலை ஒன்றில் பின்பகுதியைத் திறந்து மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்ததுடன் ,4 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 1271 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று  குறித்த மதுபானசாலை கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதன்போது மதுபானசாலையின் பின்பகுதி வாசல் பகுதியால் ஒருவர் மதுபானங்களை வியாபாரத்துக்காக வெளியில் எடுத்துக்கொண்டு வந்த நிலையில் பொலிஸார் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.இதனை தொடர்ந்து குறித்த மதுபானசாலையின் பின்பகுதி வாசல் பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டனர்

இதன்போது மதுபானசாலை வெளிப்பகுதியில் மதுபானங்களை வைத்துக்கொண்டிருந்து மதுபானசாலையில் கடமையாற்றும் ஒருவரைக் கைது செய்ததுடன், அங்கிருந்து 1271 கால் போத்தல் கொண்ட மதுபானங்களை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட மதுபானங்களை மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் தற்காலிகமாகச் சீல் வைக்கும் நடவடிக்கையினை மதுவரி திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.