மட்டக்களப்பு பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆணொருவரின் சடலம் மீீட்பு

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு ஆற்றுவாய்ப் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலமீன்மடு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று (29) மாலை மட்டி எடுப்பதற்காகச் சென்ற வேளையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியை அண்மித்த ஆற்றில் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களும், படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காணாமல்போயிருந்த இளைஞர் இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தைப் பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.