மீண்டும் நீடிக்கப்பட்டது பயணத்தடை! வெளியான அறிவித்தல்

மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்படி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை இந்தப் பயணத் தடை அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், நாட்டை இரண்டு வாரங்களுக்கு முழுமையாக முடக்குமாறு சுகாதாரப் பிரிவினர் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.இந்நிலையிலேயே மீண்டும் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.


பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்களுக்கு 2 நாட்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாளை பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவில்லை என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் ஜோன்ஸ்டர் பெர்ணான்டோ,நாளைய தினத்தில் நாடு முற்றிலும் திறக்கப்படாது என்றும், ஆனால் வீடுகளுக்குத் தேவையான பொருட்களை வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சென்று வாங்கிக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார்.

நாளை இரவு 11 மணிக்கு அமுலாகின்ற பயணத்தடை வரும் 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.மீண்டும் 31ஆம் திகதி முதல் அமுலாகின்ற பயணத்தடை ஜுன் 4ஆம் திகதி அதிகாலை தளர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மீண்டும் 4ஆம் திகதி இரவு 11 மணிமுதல் 7ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.இதேவேளை, பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு சுகாதாரப் பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.