மன்னாரில் இளைஞர்களின் முன்மாதிரியான செயல்பாடு ! 50 கட்டில்கள் கோவிட் சிகிச்சைப் பிரிவிற்கு

மன்னார் மாவட்ட இளைஞர்களின் முயற்சியினால் தயாரிக்கப்பட்ட 50 கட்டில்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவிற்கு வழங்கி வைக்க மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.


இன்றைய தினம் புதன்கிழமை குறித்த கட்டில்களின் தரம் மற்றும் பயன்பாடு தொடர்பாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மற்றும் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் கோவிட் தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கோவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்கள் எனும் செயல் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட இளைஞர்களின் முயற்சியினால் 50 கட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவிற்குக் குறித்த கட்டில்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.