மரத்தில் ஏறி தனிமைபடுத்தி கொண்ட கொரோனா இளைஞர்!

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடு ஊரடங்குகளுடன் அரசு எச்சரித்து வருகிறது.இந்நிலையில், கொரோனா உறுதியாகி வீட்டில் தனிமைப்படுத்த வசதியில்லாத வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தனிமைப்படுத்தி கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கொத்தன்கொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா(25), இவர் வீட்டில் பெற்றோர் சகோதரர் என மொத்தம் 4 வசிக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனையில், போதிய படுக்கை வசதி இல்லாததை அறிந்த அவர் அங்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள திட்டமிட்டார்.ஆனால், அவரது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டுமே உள்ளதால் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தின் மேல் கட்டிலை கட்டி தங்கினார்.

மேலும், கடந்த 2 நாட்களாக அவர் மரத்திலேயே தனிமைப்படுத்தி கொண்டார். அவருக்கு தேவையான உணவு, மருந்து மாத்திரைகள் அனைத்தும் கயிறு மூலம் அவரின் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகிறது.