ரொறன்ரோவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக திரண்ட மக்கள்

காசா மக்களுக்கு ஆதரவாக ரொறன்ரோவின் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீனிய கொடிகளுடன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சனிக்கிழமை மாலை நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பாலான மக்கள் பாலஸ்தீன் விடுதலை கோரி முழக்கமிட்டனர்.

பாலஸ்தீனிய இளைஞர்கள் அமைப்பு முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டம் போன்று, வட அமெரிக்காவிலும், உலகின் முக்கிய பகுதிகளிலும் பெருவாரியான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேலிய படைகளுக்கும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அநீதிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
பல பாலஸ்தீனிய குடும்பங்களை தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கான குடியேற்றவாசிகளின் முயற்சிகளை பாலஸ்தீனியர்கள் எதிர்த்தபோது கிழக்கு ஜெருசலேமில் பதற்றம் தொடங்கியது.

மட்டுமின்றி, இஸ்லாமியர்களும் யூதர்களும் புனிதமாக கருதப்படும் பகுதியில் அமைந்துள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய பொலிஸ் முன்னெடுத்த நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக அமைந்தது.இந்த மோதலில் 300-கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். தொடர்ந்து திங்கள்கிழமை பிற்பகுதியில் ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ரொக்கெட்டுகளை வீசியது.இதற்கு பதிலடியாக காசா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை முன்னெடுத்தது. அது முதல் ஹமாஸ் சுமார் 2,000 ரொக்கெட்டுகளை வீசியதாக கூறப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவை இலக்கை எட்டவில்லை என்பது மட்டுமல்ல, இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளால் அவை முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் கண்மூடித்தனமான வான் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.இதுவரை 145 பாலஸ்தீனியர்களும் 8 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.