யாழில் கொரோனா பரவல் தீவிரம்..! 600 படுக்கைகளுடன் நாவற்குழியில் சிகிச்சை நிலையம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் நாவற்குழியில் 600 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை நிலையம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

இன்று மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில்

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன ஏற்கனவே கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்தில் தையிட்டி பகுதியில் இடம்பெற்ற திருமண வீட்டில் 20க்கும்

மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பொதுமக்கள் திருமண வீடுகள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களை முற்றாக நிறுத்துவது கொரோனா சூழலில் தமது பாதுகாப்பை உறுதிப் படுத்துவதாக அமையும்.

யாழ்.மாவட்டத்தில் பெற்றோல் எரிவாயு ஏனைய அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடுகளும் ஏற்படாத வண்ணம் அதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் தமது பாதுகாப்பையும் சமூகத்தின் பாதுகாப்பபையும் கருதி தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.