தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி

கோவிட் வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள தகுதி பெற்ற மக்களுக்கு அத்தியவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், பிரதேச செயலாளர்கள் இந்த நிவாரண பொதியை பெறக் கூடியவர்களை தெரிவு செய்ய உள்ளனர்.
இந்த நிவாரணப் பொதியில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியவசிய பொருட்கள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மூன்று நாட்களுக்குள் இந்த நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நிவாரணப் பொதியை பெற தகுதி பெற்றவர்களுக்கு மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகள் நிவாரணப் பொதிகளை பகிர்ந்தளிக்க உள்ளனர்.

10 கிலோ கிராம் வெள்ளை நாடு அரிசி, 5 கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி, 3 கிலோ கிராம் கோதுமை மா, 3 கிலோ கிராம் கிழங்கு, 2 கிலோ கிராம் மைசூர் பருப்பு, ஒரு கிலோ கிராம் சீனி, ஒரு கிலோ கிராம் பளுப்பு சீனி, 500 கிராம் நெத்திலி, 3 கிலோ கிராம் வெங்காயம், 200 கிராம் தேயிலை, 100 கிராம் மிளகு, ஒரு கிலோகிராம் கட்டி உப்பு, 200 கிராம் மிளகாய் தூள், இரண்டு 90 கிராம் சோயா பக்கட்டுகள், ஒரு கிலோகிராம் நுட்லிஸ், 500 கிராம் கிரீம் கெக்கர் பிஸ்கட், 300 கிராம் மாரி பிஸ்கட், 10 முகக்கவசங்கள், 100 மில்லி லீற்றர் கிருமி தொற்று நீக்கி உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்கள் இந்த நிவாரணப் பொதியில் அடங்கியுள்ளன.