யாழில் மகனின் பிறந்ததினத்தை கொண்டாடிய தாய் மீது அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் தனது மகனின் பிறந்ததினத்தை பெருமெடுப்பில் கொண்டாடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லியடி துன்னாலை, குடவத்தை பகுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. கோவிட் 19 சுகாதார நடைமுறைகளை மீறி பெருமளவானவர்களை அழைத்து பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றது.

நிகழ்வுகளிற்கு தடைவிதித்தும், அயல்வீடுகளிற்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுமுள்ள இந்த காலகட்டத்தில், பிறந்தநாள் நிகழ்வில் அயலவர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், பெரிய சத்தத்தில் குத்துப்பாடல்களும் ஒலிக்க விடப்பட்டது.

தகவலறிந்து நெல்லியடி பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேலி பாய்ந்து நாலு திசைகளிலும் சிதறி ஓடிவிட்டனர்.

சுகாதார விதிமுறைகளிற்கு முரணாக பிறந்ததினத்தை கொண்டாடிய வீட்டு உரிமையாளரான தாய் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், வீட்டில் பாடல் ஒலிக்க விடப்பட்டிருந்த ஒலிபரப்பு சாதனங்களையும் பொலிசார் கைப்பற்றினர். கைதான பெண் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.