கனடாவில் இளைஞருக்கு சிறிய தந்தையால் நேர்ந்த துயரம்

இந்தியாவிலிருந்து மாணவர் விசாவில் கனடா சென்ற இளைஞர் ஒருவர், அவரது சிறிய தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்தியாவிலுள்ள பர்னாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹர்மன்ஜோத் சிங் பட்டால் (Harmanjot Singh Bhattal, 19) என்ற இளைஞர், எட்மண்டனிலுள்ள தன் சித்தி வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பட்டாலின் சித்திக்கும் சித்தப்பாவுக்கும் இடையே சண்டை நடந்திருக்கிறது. இதனையடுத்து பட்டால் சண்டையை விலக்க சென்றிருக்கிறார்.

அப்போது, சித்தப்பாவான கம்தூர் சிங் (Gamdoor Singh) கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டிருக்கிறார். அதில், பட்டால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். காயமடைந்த அவரது சித்தியான சத்வீர் கவுர் (Satvir Kaur) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் , துப்பாக்கியால் சுட்ட கம்தூர் சிங் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டாலின் தந்தையான அவதார் சிங் (Avtar Singh), இந்த செய்தி கேட்டு தங்கள் குடும்பம் ஆடிப்போயிருப்பதாகவும், பட்டாலின் உடலை இந்தியா கொண்டுவர முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்த பட்டால், தன் பெற்றோருக்கு ஒரே மகன் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.