குழியில் தவறி விழுந்த மூன்று வயது சிறுமி உயிரிழப்பு !

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி கிராமத்தில் நீர் நிரம்பிய குழியில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,விக்னேஸ்வரன் லக்ஷிக்கா (வயது 03) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று காலை சிறார்களுடன் விளையாடிய பிள்ளையைக் காணவில்லை என்று தேடிய போது வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிரம்பிய குழியினுள் சிறுமி விழுந்துள்ளதைக் கண்டு பிள்ளையின் சடலத்தினை நேற்று மாலை மீட்டுள்ளனர்.கிணறு கட்டுவதற்காக வெட்டப்பட்ட குழியானது பாதுகாப்பான கட்டுக்கள் கட்டப்படாத நிலையில் பிள்ளை அதற்குள் விழுந்து உயிரிழந்துள்ளது என்று ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.