கொரோனா தொற்றை கண்டறிய இலங்கையில் அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்களைக் கண்டறிவதற்காக புதிய பரிசோதனைகளை பரிசீலித்து வருவதாக இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர், விஞ்ஞான பேராசிரியர் சஞ்சய பதீகே இதனைத் தெரிவித்துள்ளார். ஆர்.டி லேம்ப் தொழில்நுட்பத்தின் உதவியுடன், குறித்த புதிய முறைமையின் ஊடாக குறுகிய காலத்திற்குள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.அதேநேரம், சாதாரண மக்களினால், குறைந்தளவான பணத்தை செலவிட்டு கொரோனா பரிசோதனைகளை இந்த புதிய முறைமையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என இலங்கை நனோ தொழிநுட்ப நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் விஞ்ஞான பேராசிரியர் சஞ்சய பதீகே தெரிவித்துள்ளார்.அதற்கான பரிசோதனை உபகரணங்களைத் தயாரிப்பதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவு, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை, பொரளை பரிசோதனை நிறுவகம், ஐ.டி.எச் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் இரசாயன ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உலகின் பல்வேறு நாடுகளில் ஆர்.டி லேம்ப் தொழிநுட்பத்தின் ஊடாக, கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், அந்த நாடுகளில் வீசா பெற்றுக்கொள்ளவும் இந்த பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.