புதையலில் இருந்த நாணயங்களாம்..பழமை வாய்ந்த நாணயக் குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற மன்னார் இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற பழைமையான நாணயக் குற்றிகள் எனக் கூறி நாணயக்குற்றிகளை விற்பனை செய்ய முயன்ற இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்ச்சி, மன்னார் மாவட்ட விசேட விசாரணை பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், தொல்லியல் முக்கியத்துமிக்கதென விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்ட 257 நாணய குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நேற்று வியாழக்கிழமை மாலை புதையலில் இருந்து கிடைக்கப் பெற்ற தொல்பொருள் நாணயக் குற்றிகள் எனக் கூறி விற்பனை செய்ய முயன்ற போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரை மன்னார் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், விசாரணையின் பின் குறித்த நபர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதோடு, மீட்கப்பட்ட நாணயக்குற்றிகளும் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.