நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு..!!

மத்திய, தென், ஊவா, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை வேளை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.காற்று :மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.கடல் நிலை:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.