பிரதமர் மஹிந்த தலைமையிலான தாமரை மொட்டின் கூட்டத்தைப் புறக்கணித்த தலைவர்கள்..!! பிசுபிசுத்துப் போன கூட்டம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடிய விசேட கூட்டம் பிசுபிசுத்துப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ (தேசிய சுதந்திர முன்னணி), உதய கம்மன்பில (புதிய ஹெல உறுமய), வாசுதேவ நாணயக்கார (ஜனநாயக இடதுசாரி முன்னணி) போன்றோர் வெளியேறியமையால் கூட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புகள், குழுக்களைச் சேர்ந்த பல டசின் கணக்கானோரும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை அறிந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்றோர் அது குறித்து பிரதமரின் அலுவலக ஆளணி அதிகாரியான பிரதமரின் மகன் யோஷித ராஜபக்சவுடன் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர்.இதையடுத்து, பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலில் இவ்வாறு பலர் அழைக்கப்பட்டிருக்கின்றமையை யோஷித உறுதிப்படுத்தினார். இதன் பின்னர் நேரத்துடன் பிரதமரின் அலுவலக இல்லத்துக்கு வருகை தந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் பிரதமர் மஹிந்த ராபக்சவைச் சந்தித்துத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.எனினும், அவர்களுடன் வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளனர்.ஆயினும், மொட்டுக் கட்சிக் கூட்டணியின் உள் வீட்டுக் குழப்பத்தைத் தீர்க்க இன்று எடுக்கப்பட்ட கூட்டு முயற்சி, பஸில் தலைமையில் பல சிறு கட்சிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்குபற்றிய காரணத்தால் பிசுபிசுத்துப் போனது எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.