தமிழ் புத்தாண்டில் இத மட்டும் செய்யுங்கள் வருடம் முழுதும் நன்மைதான்

தமிழ் புத்தாண்டு நாளில் ஏராளமானோர் அதிகாலையிலேயே கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். புது வருடப்பிறப்பன்று குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபடுவது அதிக நன்மைகளைத் தரும். புத்தாண்டு நாளில் ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானங்கள் கொடுப்பதால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாளை, புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். முதல்நாளில் பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை. தமிழ் புத்தாண்டு அன்று அறுசுவைகளும் இடம் பெற்றிருக்கும் உணவை சமைத்து படையலிட வேண்டும். இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய ஆறு சுவைகளும் இருக்கும் உணவுகளை சமைப்பது சிறப்பு. அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இவ்வாறு அறுசுவை உணவினை புத்தாண்டின் தொடக்கத்தில் படைக்கப்படுகிறது. பொதுவாக நல்ல நாட்களில் பாகற்காய் சேர்ப்பது இல்லை.

ஆனால், தமிழ் புத்தாண்டு அன்று அத்தனை வகையான சுவைகளும் இடம் பெற்ற படையலை படைப்பது விசேஷம். பஞ்சாங்கத்திற்கு பூஜை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிந்து அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர், விநாயகர் நவக்கிரகங்கள், குல தெய்வம் ஆகியவைகளுக்குப்பூஜை செய்து வழிபட வேண்டும். கனி காணுதல் சித்திரை வருடப்பிறப்பன்று பலரது வீட்டிலும் கனி காணுதல் நடைபெற்றது. பூஜை அறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மங்கள பொருட்களை காணச்செய்வதே கனி காணுதல் ஆகும். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

குலதெய்வ வழிபாடு : சித்திரை புத்தாண்டு அன்று நமது குலதெய்வ வழிபாடு நன்மை பயக்கும். குல தெய்வ வழிபாட்டின் மூலம் நம் குடும்பம் வாழையடி வாழையாய் தழைக்கும். நம் இஷ்ட தெய்வ வழிபாடு இருந்தாலும் முதலில் குல தெய்வத்தை வணங்கினால் தான் சகல சௌபாக்க்யங்களும் நம்மை தேடி வரும். வாழ்க்கை செழிப்புடன் அமையும். பஞ்சாங்கம் படித்தல் சித்திரைமுதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் பலவித பலன்கள் கிடைக்கும். விரதத்தைப்பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப்பற்றிச் சொன்னால், செல்வச்செழிப்பும் கரணத்தைப் பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும். அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும். யோகத்தைப்பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும். தானம் செய்தால் தோஷங்கள் நீங்கும் புது வருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். குடை தானம், செருப்பு தானம், விசிறி தானம் ஆகியவற்றை செய்யலாம். நீர் மோர் பந்தல் அமைப்பது, தண்ணீர் பந்தல் அமைப்பது போன்றவைகளை செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கும்.

சித்திரை கைநீட்டம் : சித்திரை மாதம் முதல் நாள் கை விசேடம், கை நீட்டம் என்று ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகளுக்கு அன்பளிப்பாகப் பணம் தருவதே இப்படிச் சொல்லப்படுகிறது. அதற்கென்று ஒரு நேரம் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் தாத்தா, அப்பா என்று வீட்டுப் பெரியவர்களின் காலில் அனைவரும் விழுந்து ஆசி பெற்று, அவர் தரும் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இதனால், ஆண்டு முழுவதும் பணவரவுடன் பல நன்மைகளும் ஏற்படும் என்பது நம்பிக்கை. இப்படிப் பெரியவர்கள் கொடுக்கும் பணத்தைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்த சித்திரை பிறப்பு வரை கூட சிலர் வைத்திருப்பர்.