யாழ் விவசாயிகளை நேரில் சந்தித்தார் அங்கஜன் இராமநாதன்!

விவசாய செய்கை பகுதிகளான சுன்னாகம் மற்றும் புன்னாலைக்கட்டுவனுக்கு இன்று (29) யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் விவசாய பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் நேரடியாக கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அப்பகுதிகளில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயிகளை களத்திலே அங்கஜன் இராமநாதன் சந்தித்து கலந்துரையாடினார்.வீதிகளில் கனரக வாகனங்களை கொண்டு சென்று விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றி சந்தைப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள், விவசாய நடவடிக்கைக்காக விவசாய பெருமக்கள் தூரவுள்ள தத்தமது நிலங்களுக்கு செல்வதற்கான அனுமதிகள், தற்போது புகையிலை அறுவடை காலம் என்பதால் அறுவடைக்கான போக்குவரத்து அனுமதிகள், சந்தை வாய்ப்புகள் பற்றியும் விவசாயிகள் அங்கலாய்தனர்.

விவசாய மருந்துகள், உரங்கள், கால்நடை மருந்து பொருட்கள், தீவனங்கள் போன்றவற்றை தொடர்ச்சியான ஊரடங்கினால் மூடியுள்ள விவசாய உள்ளீட்டு கடைகளில் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் கூறினர்.
இவ்வாறாக தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை அங்கஜன் இராமநாதன் அவர்களிடம் முன்வைத்த விவசாயிகளிடம் இதற்கான பொறிமுறைகள், வழிமுறைகள் தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரிகளுடனும் காவல்துறையினருடனும் கலந்துரையாடி விரைவில் அது சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

விவசாய உள்ளீட்டு பொருட்களை அந்தந்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாய சம்மேளனங்களினூடாக நடமாடும் சேவையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உள்ளூர் விவசாயப் பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் சேகரிக்கவும் சந்தைப்படுத்தவும் மற்றும் தம்புள்ளை, கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் லொறிகளுக்கும், சாரதிக்கும் உதவியாளருக்கும் விசேட பொறிமுறையூடாக அனுமதி எடுத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அதிபரின் ஊடாக இராணுவ மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடித் தீர்வு பெற்றுதரப்படும் என்றும் உறுதியளித்தார்.நாளாந்த வருமானம் ஈட்டும் விவசாய தொழிலாளர்களில் பலர் சமுர்த்தி பயனாளிகள் ஆகையால் அவர்களுக்கு உலர் உணவு பொதி மற்றும் நிவராண முற்பண உதவிகள் நாளை முதல் பிரதேச செயலகம் மூலம் கிடைப்பதற்கு வழிவகை செய்வதாகவும் உறுதி அளித்தார்.