கொரோனாவிற்கு மேலதிகமாக இலங்கையர்கள் எதிர்கொள்ளப் போகும் இரண்டு பெரிய ஆபத்து?

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு மேலதிகமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது தொடர்பில் பொது மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தகவல் தெரிவிக்கும் போது; கொரோனா தொற்று அபாயத்திற்குள்ளும் தற்போது மேலும் இரண்டு அபாயத்தினை எதிர்நோக்குகிறோம். டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அந்த நோயின் பரவலை குறைப்பதற்காக உரிய துறையினர் வேலைத்திட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.கொரோனா, டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய 3 நோய் தொற்றினதும் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளது.எனினும், அவை இலங்கை வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை கட்டமைப்பினால் தாங்கிக் கொள்ள முடியாத மட்டத்தை நோக்கி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.இதேவேளை நாடளாவிய ரீதீயில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் தலைதூக்கி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்படி,இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இவ்வருட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 665 எலிக்காய்ச்சல் நோயாளிகளும், பெப்ரவரி மாதம் 453 நோயாளிகளும், மார்ச் மாதம் 188 பேரும் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45 எலிக்காய்ச்சல் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் தொற்றாளர்களில் அதிகமானவர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் எண்ணிக்கை 273 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எலிக்காய்ச்சல் காரணமாக, வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெலிசறை கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கொரோனா நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்தவர்கள் மத்தியில், எலிக்காய்ச்சலின் தாக்கமும் தலை தூக்கி வருவதால் மக்கள் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.