யாழ். மாநகர சபையின் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தம்.!! சீருடைகள் பொலிஸார் வசம்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட காவல் படையின் கடமைகள் பொலிஸாரினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

யாழ் மாநகர சபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உருவாக்கப்பட்ட காவல்படையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் சீருடைகளும் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
யாழ். மாநகரின் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஐயாயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் இரண்டாயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படும் நோக்கில் யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டது.எனினும், அவர்கள் அணிந்திருந்த சீருடையில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அதன் செயற்பாடுகளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறும்,அவர்களின் சீருடைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் ஆணையாளருக்கு பணித்திருந்தனர்.அதன் பிரகாரம் காவல் படையின் கடமைகள் இடைநிறுத்தபட்டுள்ளன.அத்துடன் அவர்களின் சீருடைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.காவல் படை தொடர்பில் வாக்கு மூலத்தையும், சீருடையையும் மேலதிக விசாரணைகள்,நடவடிக்கைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், கொழும்பு மாநகர சபையின் கீழ் செயற்படும் அதிகாரிகள் இதுபோன்ற சீருடை அணிந்து கடமைகளில் ஈடுபட்டு வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பதவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.