செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா அனுப்பிய விண்கலத்தில் இருந்த ஹெலிகாப்டர் தற்போது செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியிருக்க முடியுமா, அங்கு எதாவது உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுப் பணிகள் உலகெங்கும் நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நாசா, கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அங்கு அது ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.தற்போது அங்கிருக்கும் மண் துகள்களின் மாதிரிகளையும் பாறைகள் மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் விண்கலம் சேகரித்து வருகிறது. அந்த விண்கலத்துடன் சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது.

இன்ஜெனியூனிட்டி (Ingenuity) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.கடந்த சில நாட்களுக்கு முன் அந்த ஹெலிகாப்டரை பறக்க வைக்க நாசா திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சில காரணங்களால் அந்தத் திட்டத்தை நாசா தள்ளி வைத்தது. இந்நிலையில், தற்போது அந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மனித குல வரலாற்றில் பூமியை தவிர மற்றொரு கிரகத்தில் ஹெலிகாப்டர் பறப்பது இதுவே முதல்முறையாகும்.இந்த மாபெரும் சாதனை குறித்து நாசா JPL தனது ட்விட்டரில், “செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. சுமார் 421 மில்லியன் கிலோமீட்டர் பயணித்த அந்த விண்கலத்தின் பயணம் இதன் மூலம் முடிந்துள்ளது. இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரைச் சமாளிப்பதே அதன் அடுத்த மைல்கல்லாக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.அந்த ஹெலிகாப்டர் வரும் நாட்களில் செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இருப்பினும், அந்த ஹெலிகாப்டருக்கு பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது. ஏனென்றால், செவ்வாய் கிரகத்தில் இரவு நேரங்களில் -90 டிகிரி செல்சியல் வெப்பநிலை நிலவும்.அந்த கடும் குளிரை சமாளித்து தன்னை தானே ஹெலிகாப்டர் சூடாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஹெலிகாப்டர் சோல் மூலம் சார்ஜ் செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.