தலைக்கவசம் அணிந்து செல்லாத கர்ப்பிணியை நீண்ட தூரம் நடக்க வைத்த பெண் காவல்துறை அதிகாரி!!

ஒடிஷாவின் பாரிபாதா மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக கர்பிணிப் பெண் ஒருவர் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, உதாலா எனும் ஊரில் உள்ள மருத்துவமனைக்கு, 27 வயதாகும் குருபாரி எனும் கர்பிணிப் பெண் அவரது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது வாகனத்தை ஓட்டிய அவரது கணவர் பிக்ரம் புருலி தலைக்கவசம் அணிதிருந்தார்.

ஆனால், குருபாரி அணியவில்லை.அவர்களை இடைமறித்த ரீனா பக்சால் எனும் பெண் காவல் அதிகாரி பிக்ரம் புருலி 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.தம்மிடம் பணம் இல்லாததால் இணையம் மூலம் அபராதத்தை செலுத்துவதாகக் கூறியுள்ளார் பிக்ரம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மறுத்த ரீனா, அவரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லக் காவலர்களுக்கு ஆணையிட்டார்.பிக்ரமை காவல் துறை வாகனத்தில் அவர்கள் பிக்ரம் புரூலியை அழைத்துச் சென்றனர். சாலையில் தனியே விடப்பட்ட குருபாரி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே காவல் நிலையம் சென்றுள்ளார்.பின்னர் பிக்ரமின் குடும்பத்தினர் வந்து அபராதம் செலுத்தி அந்தத் தம்பதியை அழைத்துச் சென்றுள்ளனர்.பிக்ரம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் அதிகாரி ரீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.