யாழ்ப்பாணத்தில் கொரோனாவினால் முடக்க நிலை ஏற்படுமா..? யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை..!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள், சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும் நிலையில் இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மகேசன் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் அவர், யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று நிலைமை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.எமது மாவட்டத்தில் தொற்றுக்குள்ளன 258 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். 739 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 892 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.இந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.

தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்தோடு ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது. இடர் காலமாக இருக்கின்ற இக் காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும்.அதே போல அரச தனியார் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தங்களுடைய பாதுகாப்பையும்  பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் தங்களுடைய செயற்பாடுகளை செயற்படுத்தி கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் விடுக்கின்ற அறிவுறுத்தல்கள், அதேபோல சமூக இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றி தங்களையும், தங்களுடைய உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கின்றது எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.