பசறை விபத்து தொடர்பில் ஆராய குழு நியமனம்!

பசறை – 13 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக, பெருந்தெருக்கள் அமைச்சினால் விசேட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பெருந்தெருக்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் H.C.S.குணதிலக்கவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இருவர், குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படும் வீதியில் காணப்பட்ட இடைஞ்சல்கள் மற்றும் பாதையில் கற்பாறையை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதம் என்பன குறித்து இந்த விசேட குழுவினால் ஆராயப்படவுள்ளது.

இதனிடையே, இடைஞ்சல்களுடன் கூடிய அபாயமான வீதிகள் தொடர்பில் அறிக்கையை பெற்றுக்கொள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பிராந்தியங்களுக்கும் பொறுப்பான நிறைவேற்று பொறியியலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து சுற்றிவளைப்பிற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் மற்றும் பொதுமக்களால் உரிய முறையில் வீதி விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் பொலிஸாரினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.