வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருவோரிற்கான அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புகின்ற இலங்கையர்கள் மற்றும் இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய, கொவிட் சுகாதார அறிவுறுத்தல்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மறுசீரமைக்கப்பட்ட சுற்றுநிரூபத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டு, 14 நாட்களுக்கு பின்னரே உரிய பயண அனுமதிகளைப் பெற்று ஒருவர் இலங்கைக்கு பிரவேசிக்க முடியும்.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டு 14 நாட்களுக்குப் பின்னர், இலங்கை வருகின்ற நபர், முதலாவது நாள் தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் சோதனைக் கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.அதன் பின்னர், 7 நாட்கள் அவர் தொடர்ந்து அதே விடுதியில் தங்கியிருக்க வேண்டும்.

குறித்த 7 நாட்களும், சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல அனுமதி உண்டு. எனினும், அவர் மீண்டும் அதே விடுதியில் தங்க வேண்டும்.

7 நாட்களின் பின்னர், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்றுறுதி இல்லையாயின், அவர்தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாமல், இலங்கை வருகின்றவர்கள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு முதலாம் நாள், 11 ஆம் நாள் மற்றும் 14ஆம் நாட்களில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றுறுதி இல்லை என நிரூபிக்கப்பட்டால், அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

இதேவேளை, சுற்றுலா பயணி ஒருவர் 3 நாட்கள் மாத்திரமே இலங்கையில் தங்கியிருப்பாராயின், அவர் தேவையேற்படின் மாத்திரம் வெளியேறுவதற்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம்.