யாழில் உக்கிரம்பெறும் கொரோனா..!! இறுக்கமாக அமுலாகும் கொரோனா தடுப்பு சுகாதாரக் கட்டுப்பாடுகள்..!!

யாழ.மாவட்டத்தில் 11 நாட்களில் 101 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளானது சரியாக பின்பற்றப்படாத நிலையில் கோவிட் பரவல் தீவிரமடையுமென அஞ்சப்படுகின்றது.தீவிரமடைந்துவரும் கோவிட் தொற்று பரம்பல் தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல நடைமுறைகளை இறுக்கமாக செயற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய,பலர் ஒன்றுகூடும் வகையில் நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியைப் பெற்றபின்பே நடாத்தப்படவேண்டும்.அவ்வாறு அனுமதி பெறப்பட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளை ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.பொது மண்டபங்களில் நடாத்தப்படும் திருமணங்களில் ஆகக்கூடியது மொத்தமாக 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளுதல் வேண்டும்.வீடுகளில் நடாத்தப்படுகின்ற திருமண நிகழ்வுகளை 50 பேருக்கு மேற்படாமல் நடாத்துதல் வேண்டும்.இறுதிச் சடங்குகள் (கோவிட் இல்லாத உயிரிழப்புக்கள்) ஆகக்கூடியது 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.இறுதிச் சடங்கிற்காக வேறு மாவட்டங்களிலிருந்து உறவினர்கள் வந்து பங்குபற்றுவதை இயன்றளவு தவிர்க்கவும்.பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் மாத்திரம் வீட்டில் நிகழ்த்தப்பட வேண்டும்.மண்டபங்களில் இவ்விழாக்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

கட்டாயம் நடாத்தப்பட வேண்டிய பொதுக் கூட்டங்கள் ஒன்றுகூடல்கள் மட்டும் சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதியுடன் 150 பேருக்கு மேற்படாது நடாத்தலாம்.நிகழ்வின் முடிவில் பங்குபற்றியவர்களின் பெயர் விபரங்கள் அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.வணக்கஸ்தலங்களில் நடாத்தப்படும் திருவிழாக்கள், வழிபாடுகளில் 50 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கலந்துகொள்ள முடியும்.அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் போன்றன நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. பாடசாலைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் நடாத்தப்படுகின்ற விளையாட்டு நிகழ்வுகளிற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான பார்வையாளர்களுடன் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.வேறு எந்தவொரு கேளிக்கை நிகழ்வுகளிற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.பாடசாலைகள் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட கோவிட் தடுப்பு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்தப்பட வேண்டும்.தனியார் கல்வி நிறுவனங்களில் கோவிட் தடுப்பு சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும், மாணவர்களுக்கிடையில் சமூக இடைவெளியை தொடர்ச்சியான பேணுவதும் உரிமையாளர்களின் பெறுப்பாகும்.

பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயமாக முழுநேரமும் சரியான முறையில் முகக்கவசம் அணிவதுடன் பயணத்தின்போது இயன்றளவு சமூக இடைவெளியினைப் பேணி பயண முடிவில் கட்டாயமாக கைகளை முறைப்படி கழுவுதல் அல்லது தொற்றுநீக்கியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்தல் வேண்டும்.அத்துடன் இயன்றளவு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.மேலும் பயணத்தின்போது உரிய சமூக இடைவெளியை பயணிகளுக்கிடையில் பேணுவது நடத்துனர் மற்றும் வாகன சாரதிகளின் பொறுப்பாகும்.கோவிட் தொற்று அபாயமுள்ள இடங்களான சந்தைகள், வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே வழங்கப்பட்ட சுகாதாரத் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், சந்தைக் குத்தகைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாற்றுபவர்கள் மற்றும் நுகர்வோர் என அனைவரும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்ன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.