இலங்கையில் கொரோனா தொற்றால் பரிதாபமாக 19 வயது இளம் பெண் மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்றால் 19 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட கட்டி என்பன இவரது உயிரிழப்பிற்கான காரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதே வேளை திங்களன்று மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின.

அநுராதபுரத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.
தர்கா நகர் பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்னொருவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புக்கள் செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 6 ஐ சேர்ந்த 78 வயதுடைய ஆணொனொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி கொவிட் நிமோனியா , இரத்தம் நஞ்சானமை மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை இரவு 10.00 மணி வரை 288 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 86 327 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 82 753 பேர் குணமடைந்துள்ளதோடு , 2934 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினமும் கொவிட் தொற்றால் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.