தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி யாழ்.நகரில் தீப்பந்தப் பேரணி..!!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்தப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படவுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு- கிழக்கிலுள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த தீப்பந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.இன்று முற்பகல் 11 மணிக்கு, நல்லூர் பின் வீதியிலுள்ள போராட்ட களத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ள இப்பேரணி நாவலர் வீதியிலுள்ள ஐ.நா.அலுவலகம் வரை செல்லவுள்ளது.நீதிக்காக போராடும் இனத்தின் கோரிக்கைகளை ஐ.நா கவனத்தில் எடுத்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.