19 பேரன்-பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்- பேத்திகள்.!! ஐந்து தலைமுறை கண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பாட்டி..!!

உறவினர்கள் பேரன்,பேத்திகளுடன் 101-வது பிறந்தநாளை மூதாட்டி ஒருவர் உற்சாகமாக கொண்டாடினார்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்தான் 101-வது பிறந்தநாளை கொண்டாடி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பழனியம்மாள் பாட்டி தனது குடும்பத்தில் 5 தலைமுறையை பார்த்துள்ளார். இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள், 19 பேரன்-பேத்திகள், 25 கொள்ளுப் பேரன்-கொள்ளுப் பேத்திகள் மற்றும் 2 எள்ளு பேத்திகள் உள்ளனர்.இந்த நிலையில் நேற்று தனது 101-வது பிறந்தநாளை பழனியம்மாள் பாட்டி உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
பாட்டியின் பிறந்தநாளை கொண்டாட ஏராளமான உறவினர்கள் வருகை தந்துள்ளனர். விழாவில் தலையில் கிரீடம் அணிந்து பங்கேற்ற பழனியம்மாள் பாட்டி, கேக் வெட்டி பேரன், பேத்திகளுக்கு ஊட்டிவிட்டு மகிழ்ந்தார்.இதனை அடுத்து, உறவினர்கள் அனைவரும் பழனியம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். விழாவுக்கு வர முடியாதவர்கள் வீடியோ கால் மூலம் பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப வாழும் பழனியம்மாள் பாட்டி, தற்போதும் தன்னுடைய வேலைகளை தானே பார்த்துக் கொள்கிறார். இப்போதும் கண்ணாடி போடாமல்தான் செய்தித்தாள்களை படிப்பதாக அவரது உறவினர்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.