ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது பிறகு கடந்த ஆண்டு மட்டும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அங்கு 2,153 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இது அந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தவர்களை விட அதிகம் ஆகும்.ஜப்பானைப் பொறுத்தவரையில் தனிமையாக உணருபவர்களே அதிகமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக தனிமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் மக்களின் தனிமையைப் போக்குவதற்காக தனிமை எனும் அமைச்சகத்தை அமைத்து அதன் மந்திரியாக டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை பிரதமர் யோஷிஹைட் சுகா நியமித்துள்ளார். தனிமை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள இவர், குடிமக்களின் தனிமையையும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே ஜப்பானில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து டெட்சுஷி சாகாமோட்டோ கூறுகையில் சமூக தனிமை மற்றும் தனிமைப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் மக்களுக்கிடையிலான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.
2017-ம் ஆண்டு, இங்கிலாந்து நாட்டில் 90 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தாங்கள் எப்போதும் தனிமையை உணர்வதாக கூறியதையடுத்து, 2018-ம் ஆண்டில் தனிமை மந்திரியை இங்கிலாந்து அரசு முதல் முறையாக நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் தனிமை மந்திரியை நியமிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.‌