பச்சிளம் குழந்தையை கொடூரமாகத் தாக்கிய தாய்க்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை..?? பிரதிப்பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட தகவல்!!

யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவர் தனது 9 மாதக் குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பெண்ணை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் முற்படுத்தி மனநிலை மற்றும் பிற மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அத்துடன், குழந்தையின் உடல்நிலை தொடர்பில் சட்ட மருத்துவ வல்லுநரின் அறிக்கையைப் பெறுவதற்கு வசதியாக இருவரையும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்குமாறும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த வகையில், குறித்த பெண் மீது தண்டனைச் சட்டம் பிரிவு 300, 308 மற்றும் 308 A ஆகியவற்றின் கீழ் கொலை முயற்சி மற்றும் குழந்தை கொடுமை தொடர்பிலான குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் என பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.மேலும், குறித்த பெண் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் கூறினார்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குழந்தை, குழந்தை பராமரிப்பு மற்றும் நன்னடத்தை சேவையின் கீழ் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.